Last Updated : 14 Aug, 2015 12:01 PM

 

Published : 14 Aug 2015 12:01 PM
Last Updated : 14 Aug 2015 12:01 PM

மதுவுக்குப் பின்னே!

இளைஞர்களில் சிலர் குடிக்கிறார்கள் சிலர் மதுவுக்கு எதிராகப் போராடுகிறார்கள். எப்படியோ குடி தொடர்பாக நமது நம்பிக்கைகள் சார்ந்து அடிக்கடி சில சந்தேகங்களை இளைஞர்கள் எதிர்கொள்கிறார்கள், மது குறித்து அலசி ஆராய்பவர்கள் மது குறித்த சில அடிப்படையான தகவல்களைத் தெரிந்துகொள்வது நல்லதுதானே? எவ்வளவோ தெரிஞ்சுகிட்டோம் இதையும் தெரிஞ்சுகிடுவோமே. மது குடிப்பது வேண்டுமானால் உடலுக்குக் கேடு விளைவிக்கும்; ஆனால் அதைப் பற்றி அறிந்துகொள்வது தப்பில்லையே..!

1. ஐ.எம்.எப்.எல். எனப்படும் இந்தியாவில் கிடைக்கும் மது எப்படிச் செய்யப்படுகிறது?

இந்தியாவில் பாரம்பரிய மது வகைகளான கள், சாராயம், ஃபெனி போன்றவற்றிலிருந்து வேறுபடுத்தும் வகையில் இந்தியன் மேட் பாரின் லிக்கர் என்ற பெயரில் விஸ்கி, ரம், வோட்கா, ஒயின் போன்றவை விற்கப்படுகின்றன. ஆனால் ஐ.எம்.எப்.எல். என்ற பெயரில் தயாரிக்கப்படும் பிராந்தி, விஸ்கி போன்றவை மேல்நாட்டில் தயாரிக்கப்படும் முறையில் தயாரிக்கப்படுவதில்லை. கரும்பாலையில் கிடைக்கும் துணைப்பொருளான கருப்பஞ்சாற்றுக் கழிப்பாகிலிருந்து (மொலாசஸ்) வடித்துப் பிரித்த சாராயம்தான் (ஸ்பிரிட்), இங்கே தயாரிக்கப்படும் பிராந்தி, விஸ்கி, ரம் எல்லாவற்றுக்குமான மூலப்பொருள். பலவகை வண்ணங்கள், தண்ணீர் கலந்த வடிசாராயம்தான் ரம், வோட்கா, பிராந்தி, விஸ்கி என்று பல வகைகளில் சந்தைக்கு வருகிறது.

2. மேல்நாடுகளில் மதுபானங்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன?

மேல்நாடுகளில் பிராந்தி, விஸ்கி, ரம், வோட்கா, ஒயின் என ஒவ்வொரு மதுவும் வெவ்வேறு தானியங்கள், கனிகள் ஆகிய மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. விஸ்கி, பிராந்தி போன்றவை குறிப்பிட்ட மர, உலோகக் கலன்களில் குறிப்பிட்ட காலம் பாதுகாக்கப்பட்டு முதிர்ச்சியடைகின்றன. பின்னர் பல செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டுத்தான் சந்தைக்கு வருகின்றன.

வெளிநாடுகளில் இயற்கையான புளிப்பேறல், நொதித்தல் போன்ற நிலைகளை அடைவதற்கு மது வகைகளுக்குத் தேவையான கால அவகாசமும் செயல்முறைகளும் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் இந்தப் போக்கு இல்லவே இல்லை.

3. தினசரிகளிலும், பல்வேறு ஆங்கிலப் பத்திரிகைகளிலும் சிறிய அளவில் மது அருந்துவதால் உடலுக்கு, குறிப்பாக இதயத்துக்கு நல்லது என்ற தகவல்கள் அடிக்கடி வருகின்றனவே அது உண்மையா?

மேற்கு நாடுகளில் மதுவுக்கும் ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட இதய நோயால் இறந்துபோகிறவர்களில் மிதமான அளவில் குடிப்பவர்களைவிட மதுப் பழக்கமே இல்லாதவர்கள் எண்ணிக்கை சிறிது அதிகம் என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. ஆனால் இந்தியாவில் இது போன்ற ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவேயில்லை. அதிலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் மதுபானங்களின் தரம் பற்றிச் சொல்லவே வேண்டாம். அத்துடன் மேற்கு நாடுகளுக்கும் நமது நாட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமது உடல், நமது வாழ்க்கை முறை, பருவநிலை, உணவுப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை மேற்கு நாடுகளோடு ஒப்பிடவே முடியாது.

மதுப் பழக்கமே இல்லாத ஒருவர் தனது இதயநலத்துக்காக மட்டும் குடிக்கத் தொடங்க வேண்டியதேயில்லை. 60 மில்லிலிட்டர் மதுவில் கிடைக்கும் அனைத்து அனுகூலங்களும் நமது வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சிகள் மூலமே கிடைக்கும். குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவுகளைச் சாப்பிட்டாலே போதும். அதிகமாகக் குடிப்பது உண்மையில் இதய நோய்களை அதிகரிக்கவே செய்யும்.

4. ஐ.எம்.எப்.எல். பானங்களான பிராந்தி,விஸ்கி போன்ற மதுபானங்களைவிட பீர் குடிப்பது ஆரோக்கியமானதா?

பீராக இருந்தாலும் சரி மற்ற மதுபானங்களாக இருந்தாலும் சரி, அதில் ஆல்கஹாலின் அளவில் மட்டுமே வேறுபாடு உள்ளது. அரை பாட்டில் பீர் குடிப்பதும், 30 மில்லி விஸ்கியோ பிராந்தியோ குடிப்பதும் ஒரே விளைவைத்தான் உடலில் ஏற்படுத்துகின்றன. ஆல்கஹாலை எவ்வளவு சாப்பிடுகிறோமோ அவ்வளவு கெடுதி. அவ்வளவுதான்.

5.குடிக்கும்போது நொறுக்குத் தீனி சாப்பிடுவது ஏன்?

வெறும் வயிற்றில் குடிக்கும்போது, நேரடியாக ஆல்கஹால் ரத்தத்தில் கலந்து சீக்கிரமே போதையும் ஏறிவிடும். ஏதாவது உணவுடன் மதுவை உட்கொள்ளும்போது ஆல்கஹால் மெதுவாக உடலில் கலக்கும். அதனால் அப்படிச் செய்வார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x